Thursday, September 13, 2007

நீண்டநாள் கனவு நிறைவேறியது!!!





ஆடாத ஆட்டமெல்லாம் போட்டா....மண்ணுக்குள்ளே....என்ன சொல்லவர்ரேன்னு புரியலையா, இருங்க இருங்க வத்துட்டோம்ல...

என்ன கனவு, என்ன நடந்தது! யாரும் அடிக்க வரமாட்டேன்னு உத்திரவாதம் கொடுத்தா சொல்றேன்! என் இனிய தமிழ் மக்கள் அப்படியெல்லாம் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இதோ......நடந்த கதை....

நேற்று மாலை சுமார் 7 மணி இருக்கும் வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் அலுவலக டாய்லட்டுக்கு போயிருந்தேன், ஏன் என்றெல்லாம் கேனத்தனமாக கேட்க மாட்டீர்கள் தெரியும். திடீர் என்று, தலை சுற்றியது மயக்கம் வந்தது, என்னடா இது இதுவரை நிகழாத ஒன்று நம் உடம்புக்கு வந்துவிட்டதே என்ற பதட்டத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். உள்ளே சென்றதும், அங்கிருந்த என் மேலாளார் என்னிடம் ஓடிவந்து என்ன பிரேம்..ஏதாவது உனக்கு உணரமுடிகிறதா என்று கேட்டபிறகுதான் உண்மை புரியவந்தது. ஆட்டம் வந்தது நமக்கல்ல நம்ம கட்டிடத்திற்கே என்று, உடனே அங்கே வந்த என் பாஸ் எல்லோரும் கீழே செல்லுங்கள் என்று சொன்னதுதான் என் காதில் விழுந்தது, திரும்பிகூட பார்க்கவில்லை, படிக்கட்டு இருக்கும் பகுதிக்கு விரைந்தேன்....

எங்கள் அலுவலகம் இருப்பதோ 25 மாடி, என்ன செய்வது இறங்கினால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்திருந்ததால்,எத்தனை மாடியாக இருந்தால் என்ன....சரசரவென்று இறங்கத்தொடங்கினேன்...அங்கே பார்த்தால் எனக்கு முன் பலபேர் அவசரம் அவசரமாக இறங்கிகொண்டிருந்தனர். ஒரு பக்கம் பதட்டம், ஒரு பக்கம் இன்றோடு வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற பயம், இதையும் மீறி...போனால் போகட்டும் போடா...என்ற துனிவோடு தடதடவென்று இறங்கினேன். சில நொடிகளுக்கு பிறகு பார்த்தால் 17 மாடியில்தான் இருந்தேன். ஆஹா...இப்படி இறங்கினால் வேலைக்கு ஆகாது என்று...விட்டேன் ஓட்டம், சும்மா 4 படி இறங்குவது 7 படி தாண்டுவது இப்படியாக மிச்சம் இருந்த 17 மாடியையும் சுமார் 70 நொடிகளில் இறங்கியிருக்கிறேன் என்றால் பாருங்கள். நான் இறங்கி 4 நிமிடம் கழித்துதான் என் அலுவலக நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள். கீழே வந்தால் எல்லோரும் அங்கேதான் நிற்கிறார்கள்.

இந்த சூழ்நிலையிலும் நம்ம வாய் சும்மா இருக்கவில்லை... படிக்கட்டில் இறங்கும்போதே, அங்கே ஓடிவந்து கொண்டிருந்தவர்களிடம் பயப்படத் தேவையில்லை.. ஒன்றும் ஆகாது, இது நம் உடம்புக்கு ஒரு பயிற்சிதான் எனவே கவலைப்படாமல் இறங்கிவாருங்கள் என்று ஆறுதலகா பேசிக்கொண்டே வந்தேன்...கீழே வந்தால் எல்லோரும் கட்டிடத்திற்கு கீழேயே கூட்டமாக நின்றார்கள். உடனே ஒரு சத்தம் போட்டேன்...ஏன் எல்லோரும் கீழே வந்தீர்கள்! நீங்கள் இப்படி நிற்பதற்கு பதில் மேலேயே இருந்தால் பாதுகாப்புதான் என்று சொல்லிவிட்டு அதற்கான காரணத்தையும் சொன்னேன்! நம் கட்டிடம் முழுவதும் கண்ணாடியால் முடப்பட்டிருக்கிறது. கட்டிடம் அதிரும்போது அந்த கண்ணாடி பேனல்கள் கீழே விழ வாய்பிருக்கிறது அப்படி விழுந்தால் நினைத்துப்பாருங்கள். எனவே அனைவரும் கட்டிடத்தின் எல்லையை விட்டு தள்ளி நில்லுங்கள் என்று ஒரு சத்தம்போட்டேன்.. அதற்கு பிறகு அங்கிருந்தவர்கள் நகரத் தொடங்கினார்கள்! வாழ்க்கையில் முதல் முறையாக நில அதிர்வை சந்தித்திருந்தாலும் வந்தால் எப்படி நடக்கவேண்டும் என்பதை அறிந்திருந்ததால் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி பாதுகாத்த சந்தோஷம் மனதில்!

பிறந்ததிலிருந்து நிலநடுக்கத்தை உணரவில்லையே என்ற கேவலமான ஏக்கம் இருந்தது அதுவும் அன்று நிறைவேறிவிட்டது. ஆனால் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். படிக்கட்டில் இறங்கிவரும் போது எத்தனை வயதானவர்கள் மற்றும் பெண்மனிகள் அழுவதைப் பார்தேன் தெரியுமா... இறைவா இதுபோன்ற கஷ்டத்தை இனியொருமுறை அவர்களுக்கு தந்துவிடாதே என்று இறைவனிடம் இன்னொருமுறையும் வேண்டிக்கொள்கிறேன்!

எல்லோருமே ஒருமுறை இறைவனிடம் இப்புவியை இயற்கை பேரழிவுகளிடமிருந்து காக்குமாறு வேண்டிக்கொள்ளுங்கள் தயவுசெய்து! மிக்க நன்றி! விளையாட்டாக நான் போட்டுள்ள தலைப்புக்கு மன்னிக்கவும்! இறைவா எல்லா உயிர்களுக்கும் என்றுமே நிம்மதியை தாருமையா! நன்றி!

Wednesday, September 05, 2007

இடைப்பட்ட காலத்தில் இவைகள் அனைத்தும்...

வேட்டையாடு விளையாடு
அன்புக்குரிய நண்பர்களே! நலம்தானே அனைவரும்? நீண்ட நாட்கள் காணாமல் போயிருந்தேன், அலையடிக்க ஆரம்பித்துவிட்டது, அடிப்பது அலையாக இருந்தாலும், போர் அடிக்காமல் இருந்தால் சரி! என் பிலாக் என்பதால் நம்ம சங்கதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் ஒன்றும் தப்பில்லையே? தப்பாக இருந்தால் மன்னிக்கவும். மன்னிப்பதற்கு தமிழர்கள் என்றும் சலைத்தவர்கள் அல்லவே! நன்றி!

என்ன....என்ன நடந்தது இத்தனை நாட்களாக! நாட்கள் நகர்ந்ததே ஒழிய ஒன்றும் பெரியதாக நடந்துவிடவில்லை! சும்மா சின்ன சின்ன விஷயங்கள் நடந்தது அதை இங்கே ...
அதில் முக்கியமான மூன்று மட்டும் சொல்கிறேன்...

1. ஒரு சில மாதங்களுக்கு முன் நான் ஒரு போட்டிக்கான முதல் சுற்று தேர்வு எழுதியிருந்தேன், அதில் தேர்வு பெற்ற விஷயம் எனக்கு இறுதியாகத்தான் எனக்கு தெரியவந்தது, என்னவென்று கேட்கிறீர்களா.. அதுதான் வேட்டையாடு விளையாடு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி!
பொது அறிவு வினா-விடை நிகழ்ச்சியான் இந்த நிகழ்ச்சிக்கு நானும் தேர்வு பெற்றிருந்த விஷயம் அந்த நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டிய நாளுக்கு 2 தினம் முன்பு தெரியவர என்ன செய்வது என்றே புரியவில்லை. பொது அறிவு எங்கே தேடுவது என்று குழம்பிபோய்விட்டேன். அதைவிட ஒரு மோசமான விஷயம், அந்த நிகழ்ச்சியை ஒரு முறை கூட டி.வி யில் பார்த்தது கிடையாது! ஒரு வழியாக போய் பார்போம் என்று ஒளிப்பதிவுக்கு சென்று விட்டேன்!
ஒரு நாள் முழுவதும் ஒளிப்பதிவு கூடத்தின் குளிரில் உட்காரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது! 5 வாரங்களுக்கான ஒளிப்பதிவு நடந்தது. என்னுடைய சுற்று 4 வது சுற்றுதான்..
ஒளிப்பதிவு தொடங்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டது, முதல் சுற்றில் நான் வென்ற தொகை 0 டாலர். ஏனெனில், முதல் முறையாக கேமரா முன் அதுபோன்ற ஒளிப்பதிவு கூடத்தில் நின்றேன், எனவே அந்த பதட்டத்தில் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்ன பதில் சொல்வது என்று திகைத்து நின்றதில் ஒரு கேள்விக்கு கூட ஊகூம்...முக்கிய காரணம் என்னவென்றால், ஒரு முறையாவது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால் அந்த நிகழ்ச்சியின் அம்சம் தெரிந்திருக்கும்! சரி அப்புறம் என்ன நடந்தது....
அப்புறம் என்ன அனுபவம் இல்லை என்றாலும் அடுத்த அடுத்த சுற்றுகளில் சுதாரித்துக்கொண்ட அடியேன் ஒரு அசத்து அசத்தி இறுதியில் வெற்றி பெற்றது அடியேந்தான்.
இந்த வார வெற்றியாளர் நான் தான் என்றாலும், ஒரு மிகப்பெரிய சோகம் நடந்தது! போட்டியில் ஒரு கிளிப்பிங் சுற்றில்.. 6 கேள்விகளுக்கு பதில் ஒரு நிமிடத்தில் சொல்லவேண்டும்...என்ன நடந்தது... 30 வினாடிகளுக்குள் 5 பதில்களை சொல்லிவிட்டு அந்த ஒரு பதில் சொல்ல முடியாமல் சொலையாக ஆயிரம் டாலர் இழந்தேன்... வேதனையாக இருந்தது! அதற்கு காரணம் நிகழ்ச்சியை பார்க்காததுதான். சரி விடுங்க ஒரு தொகை கிடைத்தது!
அதன் பிறகு அடுத்த வாரத்திற்கான ஒளிப்பதிவும் உடனே நடத்தினர். ஆடையை மட்டும் மாற்றிக்கொண்டு அடுத்த வாரத்திற்கான ஒளிப்பதிவுக்கு தயாராகிவிட்டேன்... அதுமட்டுமல்ல அதுதான் அந்த நிகழ்ச்சியின் இறுதிவாரமும் கூட அந்த வாரத்துடன் அந்த நிகழ்ச்சி ஒரு முடிவை நாடியது. என்ன நடந்தது, முதல் வாரத்தில் அடைந்த வெற்றி ஒரு உற்சாகமாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை நாட்டம் அதிகமாக இல்லாமல் ஏனோ தானோ என்று பதில்கள் சொன்னேன்... இருந்தாலும் மற்றவர்களை விட அதிக சரியான பதில்களை சொல்லியிருந்தபோதும் இரு முறை தவறான பதில் கொடுத்தது, சரியான நேரத்தில் பொத்தானை அழுத்தாத காரணத்தால் மயிரிழையில் வெற்றியை தவறவிட்டேன். இருந்தாலும் இந்த வாரமும் ஒரு தொகை கிடைத்தது.. ஆக மொத்தம் ஒரு வழியா திருப்தி இல்லாமல் செய்துவிட்டோமே என்ற கவலை இருந்தாலும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது! அதைவிட ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் காலக்கட்டத்தில் சுமார் 15 தினங்கள் தினமும் என்னை தொலைக்காட்சியில் காட்டி காட்டி, என்னை மக்கள் மத்தியில் ஒரு வழி செய்துவிட்டார்கள்.. அந்த நேரத்தில் நம் தமிழ் மக்கள் பக்கம் சென்றால் என்னை அடையாளம் கண்டுகொண்டு ஒரு பார்வை பார்பார்களே....யம்மா...வெட்கமாக இருக்கு போங்க! அவுங்க பார்த்த பார்வைக்கு 2 அர்த்தம் இருந்திருக்கும். ஒன்று, பரவாயில்லை இவன் என்றும், மற்றொன்று, அந்த ஆயிரம் வெள்ளியை விட்டுட்டானே பாவி என்றது போலவும் இருக்கும். என்ன செய்வது எனக்கு தொகை ஒரு பெரிய விஷயம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதில் கிடைத்த ஒரு திருப்தி ஆயிரம் மில்லியனுக்குச் சமம்!
வசந்தம் நட்சத்திரம்


2. இரண்டாவது என்ன.....இருங்க இருங்க அதையும் சொல்லிவிடுறேன்! அதுதாங்க நம்ம ''VASANTHAM STAR'' தேர்வுச் சுற்று நிகழ்ச்சி! என்ன வசந்தம்...அது இதுன்னு கேட்கிறீங்களா, அதான் முன்பே சொல்லியிருக்கேன்ல, எங்களுக்கு இந்த வசந்தம் தொலைக்காட்சி, ஒலி வானொலி இதுதாங்க பொழுதுபோக்கு மீடியாக்கள்! அந்த வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சியில் வருடா வருடம் நடத்தப்படும் ஒரு பாட்டு போட்டி நிகழ்ச்சிதான் இந்த வசந்தம் ஷ்ஷ்ஷ்டார்!
உள்ளூர்வாசிகள் மட்டும் பங்குகொள்ளும் இந்த நிகழ்ச்சியின் தேர்வு சுற்றுக்கு நான் இந்த முறை சென்றிருந்தேன். அதிலும் ஒரு சோதனை, முதல் நாள் இரவு வரை அந்த நிகழ்ச்சியில் கலந்தும்கொள்ளும் முடிவு இல்லாமல் இருந்ததால், ஒரு பாடல் கூட பயிற்சி செய்யாமல் இருந்துவிட்டு, திடீர் என்று மறுநாள் காலை கலந்துகொள்ள சென்றேன்.. அதுவும் அங்கே நிகழ்சி நடக்கும் கூடத்தில் கிட்டதட்ட 4 மணிநேரம் உள்ளே உட்காந்திருந்ததில் இருந்த குரலும் உள்ளே போய்விட்டது, இருந்தாலும் நான் எழுதிக்கொண்டு போயிருந்த பாடலை அங்கேபோய்தான் மனப்பாடம் செய்தேன். பார்த்துபாடக்கூடாது என்று விதிமுறை என்றதும் தடுமாற்றம் வந்துவிட்டது, நமக்குத்தான் இரண்டு வரிக்குமேல் எந்த பாட்டும் தெரியாதே, என்ன செய்வது டென்சன் அதிகமாகிவிட்டது, என்னுடைய எண் வந்ததும், உள்ளே பாடச் சென்றேன், உள்ளே சென்று அந்த ஒளிப்பதிவு கூடத்தைப் பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சம் இருந்ததும் டர்ர்ர் ஆகிவிட்டது, இருந்தாலும் சமாளித்துக்கொண்டு பாட ஆரம்பித்தேன்...
சும்மா சொல்லக்கூடாது, இசையின் பின்னணியுடன் சேர்ந்து என்பாட்டை கேட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் என்னுடைய பாடல் வரிகள் பிரச்சனை என்னை சோதித்துவிட்டது, பாடும்போது அதிக பாடல் வரிகள் தவறுசெய்தேன், பாடல் வரிகளில் கவனம் செலுத்த நினைத்ததால் சுருதி தப்பிவிட்டது, வெற்றியும் தப்பிவிட்டது! அப்புறம் என்ன வீடுதான்!
உண்மையைச் சொல்லப்போனால், இந்த போட்டியில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்காவது போகவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது , அதுவும் அவுட்! அடுத்த முறை உங்கள் பிரேம் யாருன்னு நிருப்பிக்கிறேன் சரியா, யாரும் திட்டாதீங்க! அதுக்கெல்லாம் ஞானம் வேண்டும்...ஞானம் வேண்டும்...ஏன் ஞானப்பழம் அண்ணனுக்கு ஞானப்பழம் ஒன்று கொடுப்பா! ஹ..ஹா...ஹா...அஹ்...அஹ...ஹாஆ
கண்ணதாசன் பிறந்தநாள் விழா


3. இதுதாங்க மூன்றாவது, அட இதுவும் ஒரு பாட்டுத்திறன் போட்டி, என்னன்னு தெரியனுமா, சொல்லாம எங்கே போகப்போறேன், இதோ.....
"கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பாட்டுப்போட்டி" இதில் கலந்துகொள்ள ஆசை வந்துச்சா... உடனே நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்புகொண்டு என்னுடைய பெயரையும் பதிவுசெய்துகொண்டேன், அதன் படி அந்த வார இறுதியில் நடந்த தேர்வு சுற்றுக்குச் சென்றேன், ஒரு 50 பேருக்குமேல வந்திருந்தாங்க. அவுங்க எல்லோரையும் பார்த்து இதிலும் நமக்கு உஹும்...நோ...வே... என்று நினைத்துக்கொண்டு காத்திருந்தேன்...ஒவ்வொருவராகப் பாடத்தொடங்கினார்கள்...எல்லாமே கண்ணதாசன் பாடல் என்பதால், ஒரே பழமைதான். அதுவும் எல்லாமே திரு. டி.எம்.சவுந்தர் சார் பாடியதும், சீர்காழி சார் பாடியதுமா இருந்தது, இதில் என்னத்த நம்ம பாடி...ஆனால் நான் போகும்போது, நம்ம SP.B சார் பாடிய ஒரு பாடல் பயிற்ச்சி செய்துகொண்டு போயிருந்தேன். சற்று வித்தியாசமான பாட்டு, என்ன பாட்டுன்னு யாரும் கேட்க கூடாது, கேட்டாலும் சொல்லமாட்டேன். அந்த பாடல் என்றதும் பாடுவதற்கு முன் சிலர் சிரிப்பதையும் பார்த்தேன்.

பாட ஆரம்பித்தேன்.. ஒலிவாங்கி இல்லாமல் பாடவேண்டும் என்பதால் ஒரு நேர்த்தி இல்லாமல் போய்விட்டது, இருந்தாலும் நன்றாக பாடியதாக நண்பர்கள் சொன்னார்கள்.. கடைசியில் என்ன நடந்தது, நீதிபதிகள் தீர்ப்புக்காக ஒரு 30 நிமிடம் காத்திருந்தோம், அதற்கு முன்பே யார் யார் தேர்வு பெறுவார்கள் என்று அங்கே குழுமியிருந்த நாங்கள் ஒரு ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். அதில் ஒரு சிலர் என்னையும் பட்டியலில் குறிப்பிட்டார்கள். ஆனால் இறுதியில் அரைமணி நேரமாக கதைவை அடைத்துக்கொண்டு ஆலோசித்த நீதிபதிகள் ஒரு பட்டியலை கொடுத்து படிக்கச் சொன்னார்கள். என்ன கொடுமை சரவணன் அது, அந்த பட்டியலில் நாங்கள் அனைவரும் யோசித்து வைத்திருந்த ஒருவர் கூட இல்லை என்பது எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சியையும், வியப்பையும் தந்தது! என்ன நடந்தது அங்கே என்றே தெரியவில்லை. அவர்கள் தேர்வு செய்தவர்களும் திறமைசாலியாகத்தான் இருந்தார்கள்..ஆனாலும்......என்ன சொல்லுவது, திகைப்பில் அனைவரும் வெளியாகிவிட்டோம். இதில் நான் தேர்வு செய்யப்படவில்லை என்று கவலைப்படவில்லை, நல்லா பாடிய சிலர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்றுதான் புரியவில்லை! இனிமேல் அவர்கள் நடத்தும் எந்த ஒரு போட்டிக்கும் நான் போகப்போவதில்லை என்ற முடிவை மட்டும் இப்போது எடுத்திருக்கிறேன்! சரி விடுங்க....அது இருந்தா இது இல்லை,, இது இருந்தால் அது இல்லை....எல்லாம் இருந்தால் அப்புறம் நம்மை பிடிக்க ஆள் ஏது! எல்லாம் ஆண்டவன் கணக்கு! எது நடந்ததோ நன்றாக நடக்கவில்லை என்றாலும், எது நடக்குமோ அதுவாவது ஆண்டவன் கருணையால் நன்றாக நடக்கட்டும்...சார் போய் வேலையை பாருங்க..எவனாவது கதை சொன்னாபோதுமே.. அப்படியே வேலையைவிட்டு விட்டு கேட்பதா! போங்க...போங்க...வேலையப்பாருங்கப்பா....நன்றி!