Thursday, December 31, 2009

HAPPY NEW YEAR!


MAY GOD BLESS U ALL! MY WARMEST NEW YEAR WISHES TO MY RELATIVES, FRIENDS AND YOU!
MEET U ALL AGIAIN WITH A NEW POST SOON. ALL THE VERY BEST TO U. and Enjoy your Countdown Parties! Cheers.

Tuesday, November 10, 2009

சுவையான சம்பவங்களின் தொகுப்பு!



என்னை இதயத்தில் வைத்து, இறக்க மறுக்கும் என் இனிய நண்பர்களே! உங்கள் இதயங்களில் வாழும் பாக்கியத்திற்காக இதோ மீண்டும் எழுதுகிறேன்! நீண்ட நாட்களாக மனதுக்குள் வைத்திருந்த என் சொந்த செய்திகளை சுவைபட எழுத முயற்சி செய்கிறேன். எழுத்துபிழை ஓவர் பில்டப் இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே!

முதல் செய்தியாக, உள்ளூர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது. அதுதான் "நேருக்கு நேர்" என்ற பட்டிமன்ற நிகழ்ச்சி! இந்த நிகழ்ச்சியில் என்னுடைய பங்கும் நிறைய இருந்தது என்பதற்காகத்தான் இத்தனை இழுவையும். இது பலதரப்பட்ட தலைப்புகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட பட்டிமன்றம்! மொத்தம் 11 அணிகள் பங்குபெற்றன. ஒவ்வொரு அணியிலும் தலா 6 பேர்கள். ஒவ்வொரு அணியும் தலா 2 தலைப்புகளில் விவாதம் செய்யவேண்டும். கிட்டதட்ட 66 நபர்கள் இதில் பங்குகொண்டனர். இந்த போட்டியின் நடுவராக, சிம்பு, ஆரியா, பூஜா இன்னும் பல இந்திய நடிகர், நடிகைகளுடன் பேட்டி எடுத்துவரும் உள்ளூர் பிரபலம் நம்ம வடிவழகன் சார்தான்!

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் என்னுடைய நண்பர் ஆகிவிட்டதால், ஆரம்ப கட்டத்திலிருந்தே, அவரும் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவரும், வடிவழகனும் நானும் ஒன்றாக அமர்ந்து பல வாரங்கள் அந்த பட்டிமன்றத்திற்கான ஒத்திகை சுற்றுகளை நடத்தினோம்! என்னுடைய உதவி அமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்தது, வார இறுதி நாட்கள் ஓய்வு என்பதால் அங்கே போய் அமர்ந்துகொண்டு, ஒத்திகையின்போது பேச்சாளர்களுக்கு சில உதவிக்குறிப்புகள், நகைச்சுவை குறிப்புகள் என்று கொடுத்துகொண்டுமாக எல்லோரிடமும் ஒரு நல்ல நட்பார்ந்த முறையில், ஒத்திகை சென்றது!

ஒத்திகையெல்லாம் முடிந்து, பட்டிமன்றம் பதிவு செய்யவேண்டிய நாட்கள் வந்தது, அதில்தான் எனக்கு பெரிய சோதனை காத்திருந்தது! ஏனென்றால் நானும் 2 தலைப்புகளில் பேசுவதற்கு தயார்செய்திருந்தேன். செப்டம்பர் 18,19,20 என்று தேதி கொடுக்கப்பட்டுவிட்டது! ஆனால், எனக்கு இருந்த ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி காரணமாக நான் 19 தேதி காலை விமானப்பயணம்! என்ன செய்வது இறுதியாக, என் அணியில் இருந்தவர்களின் உதவியால், வெள்ளிக்கிழமை 18 தேதி அனைவரும் விடுப்பு எடுத்துகொண்டு வர சம்மதித்தனர். எனவே 18 தேதி பட்டிமன்றம், இரண்டு தலைப்புகளும் பதிவு செய்யப்பட்டது. 19 காலை விமானத்தில் புறப்பட்டேன்! கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகான முன்னோட்டம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது, அதில் முதலில் என்னை காட்டினார்கள். சந்தோஷமாக இருந்தது. அதன் பின் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு 8 மணிக்கு இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது, அனேகமாக அடுத்த ஒரு சில வாரங்களில் நான் பங்குபெற்ற தலைப்பும் வந்துவிடும் என்று கருதுகிறேன். வரும்போது தகவல் சொல்கிறேன்.



இரண்டாவது செய்தி. அட...அட்....இதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய தகவல்தான். உள்ளூர் தொலைக்காட்சி(வசந்தம்) யில் "நட்சத்திரம்" என்ற நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது. இது ஒரு நடிப்புதிறன் பற்றிய நிகழ்ச்சி....ஆதாவது நடிக்க ஆசைப்படும், நடிக்க தெரிந்த கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார்கள். இதிலும் பங்குபெற நானும் என்னுடன் பட்டிமன்றத்தில் பங்குபெற்ற என் நண்பரும் சென்றோம். அங்கே மேலும் எங்களுடைய நண்பர்கள் 2 இருந்தார்கள். எல்லோரும் நட்சத்திரம் தேர்வு சுற்று போட்டிக்காக ரிபப்ளிக் பாலிடெக்னிக் வளாகத்தில் நடந்த தேர்வு சுற்றுக்குச் சென்றோம். அங்கேயும் 100 மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். எல்லோரும் தங்களுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தினர். நானும் என் நண்பர்களும் நடித்துக் காட்டினோம். பட்டியலிடப்படுபவர்களுக்கு அழைப்பு வரும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

ஒரு வாரம் கடந்து அவர்களிடமிருந்து, நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுசம்மந்தமான ஒப்பந்தத்தில் கையொப்பம் போடவும், ஒருநாள் குறிப்பிட்டு வரச்சொல்லியிருந்தார்கள். கடைசியில் பார்த்தால் வந்தவர்களில் 12 பேர்கள் மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் 4 பேர் நானும் என் நண்பர்களும்தான். எல்லோரும் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த நாள் அன்று சென்றோம். அங்குதான் காத்திருந்தது, நம்ம சூப்பர் அதிஷ்டம்(துர்).நாங்கள் நால்வரும் உள்ளே சென்றோம், அங்கே தயாரிப்பாளர்கள் குழு எங்களிடம் ஒரு ஒப்பந்த சட்டதிட்டங்களை கொடுத்து படிக்கச் சொன்னார்கள், மேலும் நாங்கள் செய்யவேண்டியது அனைத்தையும் சொன்னார்கள். ஆனால் எனக்கும் என்னுடைய ஒரு நண்பருக்கும் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை அங்கே காத்திருந்தது, ஏன் என்றால், செப்டம்பர் 20 தேதி அன்றுதான் அவர்களுடைய மிக முக்கியமான படப்பதிவு இருந்தது. அன்று இந்தியாவிலிருந்து ஒரு இயக்குனர் வருகிறார். எனவே கட்டாயம் பங்குபெற வேண்டும். என்ன செய்வது அன்று நான் சிங்கப்பூரில் இருக்கும் வாய்ப்பு இல்லை, அதே போல என் நண்பரும் வெளியூர் செல்லவேண்டிய கட்டாயம். நாங்கள் இருவர் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடமுடியவில்லை, என்னுடைய நண்பர்கள், மகேந்திரனும், கார்திகேயனும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்கள். இன்று அவர்கள் இருவரும் கலக்கி கொண்டிருக்கிறார்கள், அன்று என் நண்பர்களே பாராட்டும் வண்னம் இருந்த நம்ம கலக்கல் எல்லாம் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது! ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதுபோன்று தொலைக்காட்சி நாடகங்கள், குறுந்திரைப்படங்களில் நடிப்பதற்கு என் மனைவி மற்றும் குடும்பத்தார்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புதான், அதிகம் படித்த குடும்பத்திலிருந்து நடிக்க செல்வது சற்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆனால் எனக்கு இருக்கும் ஆர்வத்தை அவர்கள் தடுத்து விட முடியாது. என்னுடைய முயற்சி தொடரும். கமலஹாசனின் தீவிர ரசிகன் நான். அவரை பின்பற்றவேண்டும் என்பது என்னுடைய ஆவல். பார்போம்......

3 வது விஷயம். மிகவும் முக்கியமான சந்தோஷமான நிகழ்ச்சி என் குடும்பத்தில், என் பெற்றோர்களின் 60 ம் கல்யாணம். ஆதாவது எனது தந்தைக்கு 60 வயது ஆகும் போது எனது தாய் தந்தையர் இருவரும் இரண்டாவது முறையாக இருவரும் திருக்கோவிலில் செய்துகொள்ளும் சம்பிரதாய திருமணம். இதை செய்துகொள்ள சில சட்டதிட்டங்கள் இருக்கிறது, அது அனைத்தும் என் பெற்றோர்களுக்கு ஆண்டவன் அருளால் அமைந்திருந்ததால், அதை நிறைவேற்றினோம்.

பொதுவாக இந்த மகிழ்ச்சியான விஷேசத்தை மிகவும் விமர்சையாக நடந்தவேண்டும் என்று பிள்ளைகள் நாங்களும், என்னுடைய தந்தை செயலாளர், தலைவர் மற்றும் உறுப்பினராக இருக்கும் பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆசைகொண்டிருந்தோம். ஒரு மாநாடு போல நடத்தவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தோம். ஆனால் சில மாதங்களுக்கு முன் என் குடும்பத்தில் நடந்த சோகம்( சித்தி மகன் மரணம்) எங்களை அப்படி நடத்தவிடாமல் செய்துவிட்டது. ஒரு கடமைக்காக செய்யவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளபட்டு, அதை நிறைவேற்றினோம். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவிலில் இதை எளிமையாக செய்தோம். ஆனால் அந்த கோவிலில் எங்களுக்கு ஏகப்பட்ட மரியாதையுடன் முக்கிய பிரமுகருக்கான இடம் ஒதுக்கப்பட்டு செய்து கொடுத்தார்கள். அது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது! எங்கள் குடும்பத்தார்களை தவிர எவருக்கும் அழைப்பு விடுக்காமல் செய்தாலும், அப்பா பங்குபெற்றுள்ள அமைப்புகள், மற்றும் சங்கத்தின் முக்கிய தலைவர்கள் அங்கே வந்துவிட்டார்கள். அதுவும் எனது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சிதான். அவருடைய பிள்ளைகளும்,அவருடைய துணைகளும், மற்றும் அனைத்து பேரப்பிள்ளைகளும் சூழ அவர்களுடைய திருமணம் நடந்தது. சொல்லபோனால் ஆண்டவன் எங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியம் அது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பின் எங்கள் இல்லம் வந்தோம். பிறகு ஏகப்பட்ட முக்கிய பிரமுகர்களும், என் அம்மாவின் பள்ளியை சேர்ந்தவர்களும் அப்பாவின் பள்ளி மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் வீட்டிற்கு வந்து என் பெற்றோர்களின் பாதம் வணங்கி ஆசிர்வாதம் பெற்று சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களுடைய பெருமை அன்றுதான் காண முடிந்தது. இதுபோன்றா பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்த பெருமை அன்றும் கிடைத்தது எங்களுக்கு. அவர்களுடைய ஆசி இதை படிக்கும் என் நண்பர்களும் கிடைக்கும் என்பது என்னுடைய உத்திரவாதம். இந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்குபெற தமிழகம் சென்றதால்தான், சிங்கப்பூரில் நடந்த அனைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் பங்குபெற இயலாமல் போனது. இப்பொழுது சொல்லுங்கள் எனக்கு என் பெற்றோர்கள்தானே முக்கியம். அதைதான் நான் செய்தேன். புகழ் வரும் போகும்! நல்லவர்களின் ஆசிர்வாதம் என்றுமே நமக்கு நல்லது தரும். எனவே பெற்றோர்களை மதிக்கப் பழகிக்கொள்ளுங்கள். எல்லாம் நன்மையாகவே நடக்கும்! என் மனைவி இதை படிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவும்..அஹ்...ஹ......ஹா...ஹா....

Friday, August 07, 2009

வசந்தம் ஸ்டார்! திரு. APL க்கு வாழ்த்துக்கள்!

அன்பும், பண்பும், பாசமும் நிறைய கொண்டிருக்கும் அன்பர்களே, நண்பர்களே, இவை எதுவும் கொஞ்சம்கூட இல்லாத அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம்! எழுதவே வேண்டாம் என்ற முடிவு ஒரு நல்ல முடிவாக தெரியவில்லை, ஆண்டவன் படைப்பில் அப்படியும் இப்படியுமாகத்தான் எல்லாமே இருக்கிறது, இதில் துயர சம்பவங்களுக்கு துவண்டு போகுதல் மட்டும் சரியான தீர்வாக இருந்துவிட முடியாது என்பதற்காக என்னுடைய பானியில் எழுத்துவது எனக்கு மேலும் ஆறுதலாக இருக்கும் என்ற எண்ணத்தில் உங்களுடன் மீண்டும்....பிரியமுடனையே......

இரண்டு செய்திகளை பகிர்ந்துகொள்கிறேன்!

1. வசந்தம் ஸ்டார்! சிங்கப்பூர் வாழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு விஷயம்! வசந்தம் என்ற உள்ளுர் தொலைக்காட்சி நிறுவனத்தார், 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தும் இந்த சிங்கப்பூர் தமிழ் ஐடல் நிகழ்ச்சிதான் இந்த வசந்தம் ஸ்டார்! பாட்டு மற்றும் அனைத்து திறன்களும் கொண்டவர்கள் இறுதியில் இந்த பட்டத்தை வெல்வது வழக்கம்!
பதிவு செய்து கொண்டிருப்பது நாந்தான்!

2 வது முறையாக நானும் இந்த போட்டியின் தேர்வு சுற்றுக்கு சென்றிந்தேன், அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்திருந்தாலும், என் மீது உள்ள நம்பிக்கையால, இந்த முறை ஒரு கலக்கு கலக்கி விடலாம் என்ற ஆசையுடன் சென்றிருந்தேன்! ஏகப்பட்ட கூட்டம் அங்கே, மதியம் 1 மணிக்கு அங்கு சென்ற எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இரவு 7 மணிக்கு! கார் நிறுத்தும் இடத்தில் அனைவரையும் அமர வைத்து, அவிய வைத்து பிறகு அவர்கள் முன் அப்பளம் பொறிக்கச் சொன்னார்கள்! கடையில் சமையல் சரியில்லை என்று சொல்லிவிட்டனர். என்னடா...வசந்தம் ஸ்டார் சமையல் நிகழ்ச்சியா என்று கேட்காதீர்கள். அதைவிட ரொம்ப கஷ்டமான வேலை அது! கூட்டு செய்துவிடலாம்,, ஆனால் பாட்டு செய்வது பெறும் பாடு அய்யா....

சரி...அங்கே சென்றவுடன் வழக்கம்போல என்னுடைய பதிவு எண் கொடுத்து அமர வைத்துவிட்டார்கள். நான் 130 வது நபர் என்றால் பாருங்களேன்...

கொஞ்சம் வயசு வேற ஆகிப்போச்சு, அதை மறைக்க மீசையை எடுத்து சும்மா சூர்யா மாதிரி இருக்காலாம் என்ற கொடுமையா ஆசையில் அதையும் எடுத்துவிட்டு சென்றேன்!

உள்ளூர்வாசிகளுக்கு கிடைக்கும் இந்த ஒரு வாய்ப்பை ஏன் தவற விடவேண்டும் என்ற ஓரே ஆசைதான் இதில் பங்கெடுக்க காரணம்! சரி என்னதான் நடந்தது ....சொல்கிறேன்!
6 மணி நேரம் காத்திருந்து என்னுடைய திருப்பம் வரும்போது பாடுவதற்கு உள்ளே அழைத்திருந்தார்கள். நான் 3 பாடல்கள் தேர்வு செய்துகொண்டு சென்றிந்தேன், 1. மெளனராகத்திலிருந்து.....மன்றம் வந்த தென்றலுக்கு 2. வாரணம் ஆயிரத்திலிருந்து முந்தினம்...பார்தேனே மற்றும், நெஞ்சுக்குள் பெய்திடும்!

இதில் என்ன கொடுமை என்றால், மெளனராகம் பாடலை நான் வெளியில் உள்ளவர்களிடம் பாடி காட்டிய போது, அவர்கள் அனைவரும் நாந்தான் அடுத்த ஸ்டார் என்றார்கள், அதேபோல் முந்தினம் பாடல்களும் அவர்களை அசத்தியது. நெஞ்சுக்குள் பாடல் எனக்குபிடித்திருந்தது, ஆனாலி நிறையப்பேர் அதை பாடப்போகிறார்கள் என்பதால் அதைபாடவில்லை. முதலில் உள்ளே சென்று....முந்தினம் பார்த்தேனே பாடலுக்கு முன் வரும் அந்த வசனத்தை....அழகாக பேசினேன்.....ஹாய்...வசந்தம்,ஐ அம்......இப்படியாக பேசி அசத்தினேன், அதற்கு பிறகு அந்த பாடலை நன்றாக ஆரம்பித்தது போலத்தான் தெரிந்தது, என்ன தவறு செய்தேன், என்ன நடந்தது என்றே தெரியவில்லை, ஒரு சில வரிகள் பாடியவுடனேயே நடுவர் நிறுத்தச் சொல்லிவிட்டு, அவர் அதற்கு என்னவோ விளக்கம் சொல்லி கொண்டிருந்தார்! எனக்கு என்னவோ கொஞ்சம் பிழைகள் செய்தது போலத்த்தான் இருந்தது, அந்த பாடலுக்கு பதிலாக நெஞ்சுக்குள் பெய்திடும்பாடியிருந்தால் வாய்ப்பு இருந்திருக்கும்! சரி விடுங்க......Vasantham Star..பட்டம் நம்ம கையில் கிடைக்கவில்லை என்றாலும், அந்த பட்டத்திற்கு தேவையான எவ்வளவோ திறமைகள் நம்மகிட்ட இருப்பதாக நண்பர்களும், உறவினர்களும் சொல்கிறார்கள். வேற வழியில் ஒரு கலக்கு கலக்குவோம்! 2 வருடம் காத்திருப்போம்! அடுத்த வருடம் வசந்தம் ஸ்டார் என்கையில்தான்.......கனவு....ஸ்டார்ட்........


சரி என்ன அந்த 2 வது செய்தி! அது என் குடும்பச் செய்தி, எங்கள் ஊரில், எல்லோராலும் திரு. APL என்று அன்புடன் அழைக்கப்படும் ஒரு பொது நலவாதி ஒருவர் இருக்கிறார். இவரை பற்றி உங்களுடன் சில செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்! அங்கப்பத்தேவர், குமரியம்மாளின் ஒரே அன்பு மகனாக பிறந்த இவர் குழந்தை பருவம் மாறிய காலத்திலிருந்தே.....உழைக்க ஆரம்பித்தவர். தன்னுடைய குடும்பத்துக்காகவும், ஊருக்காகவும் உழைக்கத் தொடங்கியவர்! ஏழ்மையான சூழ்நிலையிலிருந்து தன்னுடைய உழைப்பால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர், தன்னுடைய 19 வயதிலேயே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியை ஆரம்பித்தவர். அதற்கு பிறகு மேல் படிப்புகள் படித்து பதவி உயர்வுகளை பெற்றதோடு, தன் மனைவியையும் திருமணத்திற்கு பிறகு உயர் கல்வி படிக்க வைத்து இன்று அவர்களை ஒரு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக உயர்த்தியுள்ளார். இவர்கூட ஒரு சில வருடங்களுக்கு முன் அரசியலில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக தன்னுடைய அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் பணியை விருப்ப ஓய்வு தந்துவிட்டு போட்டியிட வாய்ப்பு கேட்டார், அவர் குடும்பத்தினரின் நல்ல காலம் அவருக்கு அந்த வாய்ப்பு இறுதி நேரத்தில் கிடைக்கவில்லை! அந்த முறை அந்த தொகுதியில் அவருடைய கட்சிக்காரகளுக்கு தோல்விதான்! இப்படியாக சொந்த பணத்தை செலவு செய்துகொண்டு பொதுநலத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திரு. APL அவர்கள் தன்னுடைய விருப்ப ஓய்வுக்கு பிறகு மிகவும் பொதுநலத்தில் முழுநேர சேவகம் செய்ய ஆரம்பித்துவிட்டார் எனபதற்கு அடையாளம் தற்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்பு, எங்கள் நகரத்தில் இயங்கிவரும் ரோட்டரி கிளப்பில் செயலாளராக ஒரு சில நாட்களுக்கு முன் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். பரவாயில்லை...இவருடைய உழைப்பும், பொதுநலச் சேவையும் இவருக்கு நிம்மதியை தந்தாலே போதும், அதுதான் எல்லோருக்கும் தேவை என்று அவருடை குடும்பத்தை சார்ந்தவர்களும் பச்சை கொடி காட்டிவிட்டனர். இவ்வளவு நல்ல உள்ளமும் உழைக்கும் எண்ணமும் கொண்ட APL சார் அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம். இந்த திரு. APL அவர்கள் வேறு யாருமில்லை.... என்னுடைய தந்தை ஹ...ஹா...ஹா....நன்றி! வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன் APL சார்!

Tuesday, July 21, 2009

எழுத்து இன்னும் என்கூட வாழ்கிறதே.....

எதுவுமே எழுதவேண்டாம்
என்றிருந்த எனக்கு
ஏதாவது எழுதுவது
என்ற முடிவுக்கு
வந்திருக்கிறேன்.....
எல்லாத்துக்கும்
விரக்திமட்டும் காரணமாக
விதைக்கப்படக்கூடாது
என்ற காரணம்தான்...
எழுதுகிறேன்.....விரைவில்.....

Saturday, May 09, 2009

நன்றி கூறி நிறைவு செய்கிறேன்!

அன்பு உள்ளம் படைத்த அத்துனை நண்பர்களுக்கும், வரைப்பூ நண்பர்களுக்கும் ஒரு முக்கிய தகவலுடன், என்னுடைய வரைப்பூவை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் தகவலை தெரிவித்துக்கொள்கிறேன்!

காரணம் ஒன்றுதான். அதையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மிகுந்த சோகத்தில் இருக்கிறேன். கடந்த பதிவில் இந்தியா சென்று வருவதாக எழுதியிருந்தேன், அதேபோல் இந்தியப் பயணமும் இனியதாக இருந்தது! மகிழ்சியோடு சென்று வந்தோம், புதிதாக பிறந்திருந்த என் தங்கை மகனுக்கு பெயர் சூட்டிவிட்டு, விழாவை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்து சேர்ந்தோம். தங்கை மகனுக்கு பெயர் சூட்டும் போதுகூட ...பெயர் ல...லா...என்ற எழுத்து இருக்கும் வகையில் பெயர் இருக்கவேண்டும் என்றார்கள், அதனால் ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொன்னார்கள். நான் கூட பூபாலன் என்று வைக்கச் சொன்னேன். அது பழைய பெயர் என்று கருத்து எழுந்தது, கடைசியில், பாலகுமார் என்று முடிவு செய்யப்பட்டது. அது கூட என்னுடைய தேர்வு என்று சொல்லலாம், இப்படியாக இனிமையாக இருந்த இந்தியப் பயணம் முடிந்து சிங்கப்பூர் வந்து ஒரு சில நாட்களில் ஒரு பெரிய துக்கம் எங்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஒரு விபத்தில் என்னுடைய தம்பி(சித்தி மகன்) அகால மரணம்! நான்கு நாட்கள் மருத்துவமனையில் வைத்து போராடி வந்தேன், முடியவில்லை....பிரிந்து சென்றுவிட்டான்! வெறும் 25 வயதில் இந்த உலகத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான் படுபாவி! என் வீட்டிற்கு வார வாரம் வந்து என் குழந்தைகளுடன் விளையாடி அவர்களை ஆனந்த படுத்திய அந்த நல்லவன், இன்று எங்களிடையே இல்லை!
அவனை சார்ந்த அத்தனை குடும்பங்களும் இன்று மீளா துயரத்தில் இருக்கிறது!
இதயமே வெடித்துவிடும் இன்னலுக்கு எல்லோரும் ஆளாகியிருக்கிறோம்! மீண்டு வர முடியவில்லை! அந்த அளவிற்கு அவன் நல்லவன்! அவனுடைய பெற்றோர்கள் சதா இறைவனை வழிபடும் குணம் படைத்தவர்கள். அவன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவனுடைய ஊரே கோவில் முன் கும்பிட்டுகிடந்தது. இறுதியில் இறைவனே அவனை அழைத்து வைத்துக்கொண்டான். இந்த ஒரு விஷயத்தில்தான் இறைவன் இருப்பது உண்மையா என்று தோன்றியது!

இப்படியாக இன்னல் பட்டுகொண்டிருக்கும் வேலையில், என்னை நானே தேற்றிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன், என்னுடைய குடும்பத்தார்களும் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அவனுடைய காரியங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, நான் மட்டும் தனியே சிங்கப்பூர் கடந்த மே 6 தேதி வந்தடைந்தேன். என் குடும்பத்தை இங்கே அனுப்ப என் பெற்றோர்கள் அனுமதிக்க வில்லை, இனிமேல் சிங்கப்பூரே வேண்டாம் என்று கூட என்னிடம் கூறினார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டு பிரஷை ஆகிவிட்டேன், இனிமேல் இதை விட்டு எங்கே செல்வது, என்னை பொறுத்தவரை, பாதுகாப்பாக நடந்துகொண்டால், எல்லா நாடுமே பாதுகாப்பானதுதான், சிங்கப்பூர் மிகுந்த பாதுகாப்பான நாடு, எனவே என் வாழ்க்கை இங்கேதான் தொடரும்.

இந்த வேதனையான சூழ்நிலையில், அவனை பற்றிய துயரத்தில் இருந்து விடுபடுவது எளிதல்ல எனவே, துயரத்தில் இருக்கும் எனக்கு இனி, கேலிக்கை, கிண்டல், நகைச்சுவை இதெல்லாம் தேவையில்லாத ஒன்றாக தோன்றுகிறது, அதற்காக முதலில் இனிமேல் வரைப்பூவில் எந்த பதிவும் போடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன், எனவே, இதுவரை என்னுடைய வரைப்பூவிற்கு வந்து என்னிடம் அறிமுகமாகியும், அடிமனதில் இடம்பிடித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டு, மேலும் தெரிந்தோ தெரியாமலோ, பதிவு அல்லது பின்னூட்டம் என்ற பெயரில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டும், உங்களிடமிருந்து வணக்கமும் நன்றியும் கூறி விடைபெறுகிறேன்!! வாழ்க தமிழ்! வாழ்க மக்கள்! வளர்க மனிதகுலம்! நன்றி!!

Friday, March 27, 2009

இந்தியப் பயணம்!

வணக்கம் வந்தவர்களே!! நண்பர்களே!
வழக்கமா சொல்வதுதான்! நேரமில்லை பதிவு போட!

நாளை 28 ந் தேதி, குடும்பத்துடன் பிறந்த ஊருக்கு(பட்டுக்கோட்டை) பயணம்! ஒரு வாரம் மட்டும் விடுப்பு எடுத்துள்ளேன். தங்கை மகனுக்கு பெயர் சூட்டும் விழா எங்களது இல்லத்தில் நடைபெறுவதால் பங்கெடுக்க குடும்பத்துடன் செல்கிறோம்!! வந்த பின்பு பயணம் பற்றி பகிர்ந்துகொள்கிறேன். யாரு இதெல்லாம் கேட்டா ....என்று கேட்பது என் காதுக்கு கேட்கிறது!! இதெல்லாம் வழி தவறி வந்த ஆட்டுகுட்டிக்கு .....கூறுவதாக இருக்கட்டுமே....ஹி..ஹி.....ஹி... மீண்டும் சந்திப்போம்....வர்டா....

Monday, March 02, 2009

ஆத்தா....நான் தாய் மாமன் ஆயிட்டேன்...






என்னை
முதல் முறையாக
தாய் மாமனாக்கிய
தங்கைக்கு என் நன்றி!

பிறந்திருக்கும்
பிஞ்சு..
பிரேமிடம்
கொஞ்சும் நாளை நினைத்து
காத்திருக்கிறேன்!

இன்று
அழகிய ஆண் குழந்தைக்கு
அம்மா நீ!
ஆனாலும்
அனைவருக்கும்
அன்பு குழந்தையாகவே நீ
என்றும்!

தாய் மாமனாகவும் உன்
மகனுக்கும்!
அண்ணனாக உனக்கும்!
மச்சானாக உன்
மணவாளனுக்கும்
ஆயிரம் ஆயிரம்
ஆசிகளை வழங்கி
ஆனந்தம் கொள்கிறேன்!
ஆண்டவனின் ஆசிர்வாதம்
உங்களுக்கு என்றும் உண்டு!!

இதுவரை
இனிய தம்பதிகளாக இருந்து
இன்று முதல்
இனிய குழந்தைக்கு
பெற்றோராக அகம் மலரும்
டாக்டர் மஞ்சு! டாக்டர் கார்திக்
உங்களுக்கு வாழ்த்துக்கள்!

என்றும்
பிரியமுடன்
பிரேம்குமார், குடும்பம்!

Monday, February 23, 2009

உலகில் உயர்ந்தவன் நீயே!


சின்ன சின்ன ஆசைகளுடன்
புறப்பட்டு இன்று
சிகரத்தை தொட்டுவிட்டாய்!
தொட்டது நீயாக இருந்தாலும்
பெருமைகளை எங்களுக்கு
பகிர்ந்துகொடுத்துவிட்டாய்!

இறைவனுக்கு எல்லா புகழையும் தந்திருந்தாலும்
இனிய தமிழில் சொல்லும் பொழுது
தமிழர்களுக்கு அல்லவா போய் சேர்ந்திருக்கிறது!
இறைவன் இங்கே ஒவ்வொரு நல்ல உள்ளத்திலும்
இருப்பதை நீ அறிந்திருப்பதால் சொன்னாயோ!!

உனக்கு விருதுகிடைக்க
உலகெங்கும் இருந்த
உள்ளங்கள் வேண்டியதை
இறைவன் பார்த்துவிட்டான்
இதோ தந்துவிட்டான்!
அவனை புகழ
அருகதையுள்ள ஆளும் நீதான்!
புகழை தந்த ஆண்டவனையே
புகழும் மனிதா உன்
புகழை பாட
எவனும் இன்னும் பிறக்கவில்லை!
உயர்ந்து நிற்கிறாய்!

இறைவன் உமக்கு
எல்லா அருளையும் தரட்டும்!
உமக்கும் உமது குடும்பத்தார்களுக்கும்
இசை குடும்பத்துக்கும்
இறைவன் எல்லாவற்றையும் அருளட்டும்!
வாழ்க தமிழ்! வளர்க இசை! வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ஆர்!

Wednesday, February 11, 2009

காதலே....நிம்மதி!!


காதலர் தினம் வருகிறது!
கவிதையும் வந்திருக்கிறது!
படிப்பதற்கு உங்களுக்கு
ஆர்வம் வரவில்லை என்றால்
அபத்தம் இல்லை!
படித்துவிட்டு
ஆத்திரம் வந்தால்
அதற்கு நான் பொறுப்பில்லை!

இதோ கவிதை.....


சொந்த வேரோடு
தான் கொண்ட காதலை
சொன்னால்தான்
தெரியுமா?

சொன்னால்தான் காதலா?
சொன்னால் காதல்
சுடுகாட்டோடு எரிக்கப்படுகிறது
சொல்லாவிட்டால்
சொர்க்கத்திலும்
சுவைக்கிறது!

இருக்கும்போது
இனிக்கவைக்காத காதல்
இனி சொர்கம்வரை சென்று
என்ன கிழிக்கப்போகிற்து
கேட்பது புரிகிறது!
சொல்லாத காதலுக்கு
சொல்லப்படும் நியதி இது!
எல்லோரையும்போல்
இவனும்!

இதில் சில
சுட்டவரிகளும்
சுவையூட்டப்பட்டிருக்கிறது
இனித்தால் சுவைக்கவும்
இல்லையேல் சும்மா இருக்கவும்!
காதலிக்கிறீங்களா என்றெல்லாம்
கேட்கப்பிடாது!
என் மனைவி காதில் விழுந்தது
எனக்கு காது இருக்காது!!
இருந்தாலும்
காதோடு..காது வைத்ததுபோல
காதல் ஓடிக்கிட்டுதான் இருக்கு!
ஹி...ஹி...ஹி...ஹீ...

உண்மையான காதலுக்கு
உயிரை கொடுக்காதீர்கள்!
வெறொருவன் வந்துவிடுவான்
வாழ்வதற்கு!!
உன்னை கொடு
இல்லையென்றால்
காதலிப்பதை
சொர்கத்தில் தொடரவும்!

Friday, February 06, 2009

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....




எல்லோருக்கும்
என் இனிய
'தைப்பூசம்'
வாழ்த்துக்கள்!

சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் சிறந்த பண்டிகைகளில் ஒன்றுதான் தைப்பூசம். உலகளவில் தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கும் அனைவருக்கும் இது முக்கியமான திருவிழா!! எல்லோரையும் காத்து நிற்கும் எம்பெருமான் முருகப்பெருமானை நினைத்து காணிக்கை செலுத்துவதும், காவடி எடுப்பதும மேலும் பல பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் சிங்கப்பூர் தமிழர்களின் சீரிய நடவடிக்கை, அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கே கோலகலம் காணவிருக்கிறது தைப்பூச திருவிழா!
இந்தவருடம் விடுமுறை தினத்தில் வருவதால் ஏகப்பட்ட பக்தர்கள் கூட்டம் அலை அலையாக அங்கு வருவார்கள் என்று தோன்றுகிறது!! எல்லோருக்கும் நல்ல அருள் கிடைத்து எல்லோருக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைய நானும் என் குடும்பத்தார்களும் அனைவருக்க்காகவும் வேண்டிக்கொள்கிறோம். அனைவரும் என் குடும்பத்துக்காக வேண்டிகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். ஓம்....ஓம்! அரோகரா...அரோகரா...

Monday, February 02, 2009

விழியில் விழுந்து இதயம் நுழைந்த....

அவளை
விழிகளுக்கு மட்டும்
பிடித்திருந்தால்
விழிகளை கழுவி
விடை கொடுத்திருப்பேன்!

இதயத்துக்குள்
இடம்பிடித்து
இறங்க மறுப்பதால்
இம்சையடைகிறேன்!

ஹ..ஹா..ஹா....கழுதைக்கு கவிதையெல்லாம் வருதுய்யா...
அட..டா..டா...கழுதை என்றதும் ஒரு கவிதை ஞாபகம் வருகிறது..

எனக்கும் கழுதைக்கும்
ஏதோ தொடர்பாம்
அவள் சொன்னால்
என்னுடைய எல்லா
கடிதத்தையும்
மிச்சம் வைக்காமல்
மேய்ந்துவிடுகிறதாம்!
என்
கடிதம் மீது பாவம்
கழுதைக்கே வந்தது
காதல்!
அந்த கழுதைக்கோ
அரவே வரவில்லை!!

சரி...சரி...கூல்ல்....கூல்ல்ல் டவுன்....

நன்றி!

Friday, January 30, 2009

உண்மையான தமிழக ஹீரோ....


தம்பி மருதுபாண்டி!
உன் ஒரு உயிர்
உலகில் எத்தனை
உயிர்களுக்கு
உத்திரவாதம் தந்திருக்கு!

தமிழகத்தின்
கதாநாயகன் நீ
சோனியா அம்மையாருடன்
இந்திய திருநாடே
இணைந்து சொல்கிறது!!

நீ
தமிழன்
தமிழ்நாடே
தலை வணங்குகிறது!

நீ
ஒருவன்
நிறுபித்துவிட்டாய்
உலகில் பிறந்ததன்
உண்மையை!
வாழ்க நீ....வாழ்க உன் குடும்பம்!

Wednesday, January 28, 2009

இந்த பிறவியில் இயலவில்லையே....

ஆண்டவனிடம்
அடுத்த பிறவி
அடிக்கடி கேட்கிறேன்!
உன்னுடன் வாழ
உள்ளம் கேட்கச் சொன்னது!!

Thursday, January 15, 2009

வழி பிறந்திருக்கிறது.....



என் இனிய தமிழ் மக்களே.....
என் உள்ளத்தில் குடியிருக்கும் அன்பர்களே...நண்பர்களே....அனைவருக்கும்
உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நாமெல்லாம் தமிழர்கள் என்று நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரே திருவிழா இந்த பொங்கல் திருவிழாதான், இதை உலகமெல்லாம் பரவியிருக்கும் அனைத்து தமிழ் பேசும் தமிழ் மக்களும் கொண்டாடித்தான் ஆகவேண்டும்!

உழவு செய்பவர்களுக்கு நாம் தரும் மரியாதை இது! உழவன் சேற்றில் கால் வைத்ததற்கு நன்றி தெரிவிக்காவிட்டால்...சோற்றில் கை வைக்க அருகதையற்றவர்களாக ஆகிவிடுவோம்!
அவனுக்கு உருதுணையாக இருக்கும் எருதுகளுக்கும் இன்று வாழ்த்துக்களை சொல்லித்தான் ஆகவேண்டும்! மாட்டுப்பொங்கல் மாடுகளுக்கு நாம் தரும் மரியாதை....
நமக்காக உழைக்கும் எந்த ஒரு ஜீவனையும் நாம் கடவுளை போலத்தான் போற்றவேண்டும்!
மாட்டுப்பொங்கல கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
பொதுவா மாட்டுபொங்கல் அன்று மாடுகளுக்கு வாழ்த்துச் சொல்லனும் என்று ஆசையிருந்துச்சு ஆனா...நான் போய் அதுங்ககிட்ட வாழ்த்துச் சொல்லபோய்...அதுங்க திரும்பி Same to You என்று சொல்லிவிட்டால்.....பக்கத்திலிருப்பவர்கள் சிரிப்பாங்கலே அதுதான் மக்களிடம் சேத்து சொல்லியிருக்கிறேன், உங்களில் யாரேனும் போய் அதுக்கிட்ட என் சார்பா சொல்லிவிடுங்கள். நன்றி!!

நாடும் வீடும்
நல்லாயிருக்க
மாடு கூட உதவுகிறது!
மனிதா நீ மட்டும்தான்
மனிதனையே கொல்கிறாய்
மாடுகளைப்போல..
மானிடனாய் பிறந்த
மாடுகளைவிட
மனிதனுக்காக உழைக்கும்
மாடுகளே மேல்!

இதற்குமேல் மாடுகளை பற்றி எழுதினால் எல்லோரும் ஓடுவீர்கள் என்று தெரியும். நிறுத்திகொள்கிறேன்... மீண்டும் அனைவருக்கும் பொங்கல்,புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Monday, January 12, 2009

அட....காமடிக்கு பொறந்த கவிதையே....

ஹேய்....யாரை கேட்டு உள்ளே நுழைந்தாய்..ஹ! சரி....வந்துவிட்டேய்...வாழ்ந்துவிட்டாய்.....இப்ப போகிறேன் என்கிறாய்....போஓ.....(ஜெயம் படத்தில் வரும் கதாநாயகி ஸ்டைலில் சொல்வதாக வைத்துக்கொள்ளவும்)

சரி....வரும்போது ஒன்னும் கொட்டுவரவில்லை....ஆனா போகும்போது என்னவோ கையில் ஒளித்து எடுத்து செல்கிறாயே....என்ன அது?!! காட்டு...காட்டு.....

அடிப்பாவி....அது என்னுடைய உயிர்!

இருக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா கொடுதே...
இப்ப மொத்தமா எடுத்துகிட்டு கிளம்பிட்டாயா!

சரி போ...பரவாயில்லை!
உன் உயிர் இங்கேதானே இருக்கு...அதுபோதும் நான் வாழ்ந்துகொள்வேன்!


இது என்ன என்று யாரும் என்னை கேட்காதீர்கள்!

காமடி எழுத நினைத்தேன்....திடீரென்று கவிதை எழுத தோன்றியது....
கடைசியில் ஒரு காபி வாங்கிவந்து டீ போட்டு வைத்திருக்கிறேன்....
யாரும் குடித்து தொலைக்காதீங்க....ஹ..ஹா...ஹா....