அன்பு உள்ளம் படைத்த அத்துனை நண்பர்களுக்கும், வரைப்பூ நண்பர்களுக்கும் ஒரு முக்கிய தகவலுடன், என்னுடைய வரைப்பூவை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் தகவலை தெரிவித்துக்கொள்கிறேன்!
காரணம் ஒன்றுதான். அதையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். மிகுந்த சோகத்தில் இருக்கிறேன். கடந்த பதிவில் இந்தியா சென்று வருவதாக எழுதியிருந்தேன், அதேபோல் இந்தியப் பயணமும் இனியதாக இருந்தது! மகிழ்சியோடு சென்று வந்தோம், புதிதாக பிறந்திருந்த என் தங்கை மகனுக்கு பெயர் சூட்டிவிட்டு, விழாவை சிறப்பாக கொண்டாடிவிட்டு வந்து சேர்ந்தோம். தங்கை மகனுக்கு பெயர் சூட்டும் போதுகூட ...பெயர் ல...லா...என்ற எழுத்து இருக்கும் வகையில் பெயர் இருக்கவேண்டும் என்றார்கள், அதனால் ஒவ்வொருவரும் ஒரு பெயர் சொன்னார்கள். நான் கூட பூபாலன் என்று வைக்கச் சொன்னேன். அது பழைய பெயர் என்று கருத்து எழுந்தது, கடைசியில், பாலகுமார் என்று முடிவு செய்யப்பட்டது. அது கூட என்னுடைய தேர்வு என்று சொல்லலாம், இப்படியாக இனிமையாக இருந்த இந்தியப் பயணம் முடிந்து சிங்கப்பூர் வந்து ஒரு சில நாட்களில் ஒரு பெரிய துக்கம் எங்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த ஒரு விபத்தில் என்னுடைய தம்பி(சித்தி மகன்) அகால மரணம்! நான்கு நாட்கள் மருத்துவமனையில் வைத்து போராடி வந்தேன், முடியவில்லை....பிரிந்து சென்றுவிட்டான்! வெறும் 25 வயதில் இந்த உலகத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான் படுபாவி! என் வீட்டிற்கு வார வாரம் வந்து என் குழந்தைகளுடன் விளையாடி அவர்களை ஆனந்த படுத்திய அந்த நல்லவன், இன்று எங்களிடையே இல்லை!
அவனை சார்ந்த அத்தனை குடும்பங்களும் இன்று மீளா துயரத்தில் இருக்கிறது!
இதயமே வெடித்துவிடும் இன்னலுக்கு எல்லோரும் ஆளாகியிருக்கிறோம்! மீண்டு வர முடியவில்லை! அந்த அளவிற்கு அவன் நல்லவன்! அவனுடைய பெற்றோர்கள் சதா இறைவனை வழிபடும் குணம் படைத்தவர்கள். அவன் மருத்துவமனையில் இருக்கும்போது, அவனுடைய ஊரே கோவில் முன் கும்பிட்டுகிடந்தது. இறுதியில் இறைவனே அவனை அழைத்து வைத்துக்கொண்டான். இந்த ஒரு விஷயத்தில்தான் இறைவன் இருப்பது உண்மையா என்று தோன்றியது!
இப்படியாக இன்னல் பட்டுகொண்டிருக்கும் வேலையில், என்னை நானே தேற்றிக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன், என்னுடைய குடும்பத்தார்களும் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். அவனுடைய காரியங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, நான் மட்டும் தனியே சிங்கப்பூர் கடந்த மே 6 தேதி வந்தடைந்தேன். என் குடும்பத்தை இங்கே அனுப்ப என் பெற்றோர்கள் அனுமதிக்க வில்லை, இனிமேல் சிங்கப்பூரே வேண்டாம் என்று கூட என்னிடம் கூறினார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்த நாட்டு பிரஷை ஆகிவிட்டேன், இனிமேல் இதை விட்டு எங்கே செல்வது, என்னை பொறுத்தவரை, பாதுகாப்பாக நடந்துகொண்டால், எல்லா நாடுமே பாதுகாப்பானதுதான், சிங்கப்பூர் மிகுந்த பாதுகாப்பான நாடு, எனவே என் வாழ்க்கை இங்கேதான் தொடரும்.
இந்த வேதனையான சூழ்நிலையில், அவனை பற்றிய துயரத்தில் இருந்து விடுபடுவது எளிதல்ல எனவே, துயரத்தில் இருக்கும் எனக்கு இனி, கேலிக்கை, கிண்டல், நகைச்சுவை இதெல்லாம் தேவையில்லாத ஒன்றாக தோன்றுகிறது, அதற்காக முதலில் இனிமேல் வரைப்பூவில் எந்த பதிவும் போடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன், எனவே, இதுவரை என்னுடைய வரைப்பூவிற்கு வந்து என்னிடம் அறிமுகமாகியும், அடிமனதில் இடம்பிடித்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொண்டு, மேலும் தெரிந்தோ தெரியாமலோ, பதிவு அல்லது பின்னூட்டம் என்ற பெயரில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டும், உங்களிடமிருந்து வணக்கமும் நன்றியும் கூறி விடைபெறுகிறேன்!! வாழ்க தமிழ்! வாழ்க மக்கள்! வளர்க மனிதகுலம்! நன்றி!!
Saturday, May 09, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் தம்பியின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்:(
அவரது பெற்றோரும், தங்களின் குடும்பமும், மீளா துயரிலிருந்து மீண்டு வர, இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மீண்டும் வலைபூவில் உங்கள் எழுத்து பணி தொடரட்டும்.........உங்கள் துக்கம் விலகட்டும்.
Post a Comment