Tuesday, November 10, 2009
சுவையான சம்பவங்களின் தொகுப்பு!
என்னை இதயத்தில் வைத்து, இறக்க மறுக்கும் என் இனிய நண்பர்களே! உங்கள் இதயங்களில் வாழும் பாக்கியத்திற்காக இதோ மீண்டும் எழுதுகிறேன்! நீண்ட நாட்களாக மனதுக்குள் வைத்திருந்த என் சொந்த செய்திகளை சுவைபட எழுத முயற்சி செய்கிறேன். எழுத்துபிழை ஓவர் பில்டப் இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே!
முதல் செய்தியாக, உள்ளூர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது. அதுதான் "நேருக்கு நேர்" என்ற பட்டிமன்ற நிகழ்ச்சி! இந்த நிகழ்ச்சியில் என்னுடைய பங்கும் நிறைய இருந்தது என்பதற்காகத்தான் இத்தனை இழுவையும். இது பலதரப்பட்ட தலைப்புகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட பட்டிமன்றம்! மொத்தம் 11 அணிகள் பங்குபெற்றன. ஒவ்வொரு அணியிலும் தலா 6 பேர்கள். ஒவ்வொரு அணியும் தலா 2 தலைப்புகளில் விவாதம் செய்யவேண்டும். கிட்டதட்ட 66 நபர்கள் இதில் பங்குகொண்டனர். இந்த போட்டியின் நடுவராக, சிம்பு, ஆரியா, பூஜா இன்னும் பல இந்திய நடிகர், நடிகைகளுடன் பேட்டி எடுத்துவரும் உள்ளூர் பிரபலம் நம்ம வடிவழகன் சார்தான்!
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் என்னுடைய நண்பர் ஆகிவிட்டதால், ஆரம்ப கட்டத்திலிருந்தே, அவரும் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவரும், வடிவழகனும் நானும் ஒன்றாக அமர்ந்து பல வாரங்கள் அந்த பட்டிமன்றத்திற்கான ஒத்திகை சுற்றுகளை நடத்தினோம்! என்னுடைய உதவி அமைப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்தது, வார இறுதி நாட்கள் ஓய்வு என்பதால் அங்கே போய் அமர்ந்துகொண்டு, ஒத்திகையின்போது பேச்சாளர்களுக்கு சில உதவிக்குறிப்புகள், நகைச்சுவை குறிப்புகள் என்று கொடுத்துகொண்டுமாக எல்லோரிடமும் ஒரு நல்ல நட்பார்ந்த முறையில், ஒத்திகை சென்றது!
ஒத்திகையெல்லாம் முடிந்து, பட்டிமன்றம் பதிவு செய்யவேண்டிய நாட்கள் வந்தது, அதில்தான் எனக்கு பெரிய சோதனை காத்திருந்தது! ஏனென்றால் நானும் 2 தலைப்புகளில் பேசுவதற்கு தயார்செய்திருந்தேன். செப்டம்பர் 18,19,20 என்று தேதி கொடுக்கப்பட்டுவிட்டது! ஆனால், எனக்கு இருந்த ஒரு மிக முக்கியமான நிகழ்ச்சி காரணமாக நான் 19 தேதி காலை விமானப்பயணம்! என்ன செய்வது இறுதியாக, என் அணியில் இருந்தவர்களின் உதவியால், வெள்ளிக்கிழமை 18 தேதி அனைவரும் விடுப்பு எடுத்துகொண்டு வர சம்மதித்தனர். எனவே 18 தேதி பட்டிமன்றம், இரண்டு தலைப்புகளும் பதிவு செய்யப்பட்டது. 19 காலை விமானத்தில் புறப்பட்டேன்! கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகான முன்னோட்டம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது, அதில் முதலில் என்னை காட்டினார்கள். சந்தோஷமாக இருந்தது. அதன் பின் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவு 8 மணிக்கு இந்த பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது, அனேகமாக அடுத்த ஒரு சில வாரங்களில் நான் பங்குபெற்ற தலைப்பும் வந்துவிடும் என்று கருதுகிறேன். வரும்போது தகவல் சொல்கிறேன்.
இரண்டாவது செய்தி. அட...அட்....இதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றிய தகவல்தான். உள்ளூர் தொலைக்காட்சி(வசந்தம்) யில் "நட்சத்திரம்" என்ற நிகழ்ச்சி ஒளியேறி வருகிறது. இது ஒரு நடிப்புதிறன் பற்றிய நிகழ்ச்சி....ஆதாவது நடிக்க ஆசைப்படும், நடிக்க தெரிந்த கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நிகழ்ச்சி படைக்கிறார்கள். இதிலும் பங்குபெற நானும் என்னுடன் பட்டிமன்றத்தில் பங்குபெற்ற என் நண்பரும் சென்றோம். அங்கே மேலும் எங்களுடைய நண்பர்கள் 2 இருந்தார்கள். எல்லோரும் நட்சத்திரம் தேர்வு சுற்று போட்டிக்காக ரிபப்ளிக் பாலிடெக்னிக் வளாகத்தில் நடந்த தேர்வு சுற்றுக்குச் சென்றோம். அங்கேயும் 100 மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். எல்லோரும் தங்களுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தினர். நானும் என் நண்பர்களும் நடித்துக் காட்டினோம். பட்டியலிடப்படுபவர்களுக்கு அழைப்பு வரும் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
ஒரு வாரம் கடந்து அவர்களிடமிருந்து, நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுசம்மந்தமான ஒப்பந்தத்தில் கையொப்பம் போடவும், ஒருநாள் குறிப்பிட்டு வரச்சொல்லியிருந்தார்கள். கடைசியில் பார்த்தால் வந்தவர்களில் 12 பேர்கள் மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் 4 பேர் நானும் என் நண்பர்களும்தான். எல்லோரும் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அந்த நாள் அன்று சென்றோம். அங்குதான் காத்திருந்தது, நம்ம சூப்பர் அதிஷ்டம்(துர்).நாங்கள் நால்வரும் உள்ளே சென்றோம், அங்கே தயாரிப்பாளர்கள் குழு எங்களிடம் ஒரு ஒப்பந்த சட்டதிட்டங்களை கொடுத்து படிக்கச் சொன்னார்கள், மேலும் நாங்கள் செய்யவேண்டியது அனைத்தையும் சொன்னார்கள். ஆனால் எனக்கும் என்னுடைய ஒரு நண்பருக்கும் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை அங்கே காத்திருந்தது, ஏன் என்றால், செப்டம்பர் 20 தேதி அன்றுதான் அவர்களுடைய மிக முக்கியமான படப்பதிவு இருந்தது. அன்று இந்தியாவிலிருந்து ஒரு இயக்குனர் வருகிறார். எனவே கட்டாயம் பங்குபெற வேண்டும். என்ன செய்வது அன்று நான் சிங்கப்பூரில் இருக்கும் வாய்ப்பு இல்லை, அதே போல என் நண்பரும் வெளியூர் செல்லவேண்டிய கட்டாயம். நாங்கள் இருவர் மட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடமுடியவில்லை, என்னுடைய நண்பர்கள், மகேந்திரனும், கார்திகேயனும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்கள். இன்று அவர்கள் இருவரும் கலக்கி கொண்டிருக்கிறார்கள், அன்று என் நண்பர்களே பாராட்டும் வண்னம் இருந்த நம்ம கலக்கல் எல்லாம் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது! ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதுபோன்று தொலைக்காட்சி நாடகங்கள், குறுந்திரைப்படங்களில் நடிப்பதற்கு என் மனைவி மற்றும் குடும்பத்தார்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புதான், அதிகம் படித்த குடும்பத்திலிருந்து நடிக்க செல்வது சற்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆனால் எனக்கு இருக்கும் ஆர்வத்தை அவர்கள் தடுத்து விட முடியாது. என்னுடைய முயற்சி தொடரும். கமலஹாசனின் தீவிர ரசிகன் நான். அவரை பின்பற்றவேண்டும் என்பது என்னுடைய ஆவல். பார்போம்......
3 வது விஷயம். மிகவும் முக்கியமான சந்தோஷமான நிகழ்ச்சி என் குடும்பத்தில், என் பெற்றோர்களின் 60 ம் கல்யாணம். ஆதாவது எனது தந்தைக்கு 60 வயது ஆகும் போது எனது தாய் தந்தையர் இருவரும் இரண்டாவது முறையாக இருவரும் திருக்கோவிலில் செய்துகொள்ளும் சம்பிரதாய திருமணம். இதை செய்துகொள்ள சில சட்டதிட்டங்கள் இருக்கிறது, அது அனைத்தும் என் பெற்றோர்களுக்கு ஆண்டவன் அருளால் அமைந்திருந்ததால், அதை நிறைவேற்றினோம்.
பொதுவாக இந்த மகிழ்ச்சியான விஷேசத்தை மிகவும் விமர்சையாக நடந்தவேண்டும் என்று பிள்ளைகள் நாங்களும், என்னுடைய தந்தை செயலாளர், தலைவர் மற்றும் உறுப்பினராக இருக்கும் பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆசைகொண்டிருந்தோம். ஒரு மாநாடு போல நடத்தவேண்டும் என்று திட்டம் போட்டிருந்தோம். ஆனால் சில மாதங்களுக்கு முன் என் குடும்பத்தில் நடந்த சோகம்( சித்தி மகன் மரணம்) எங்களை அப்படி நடத்தவிடாமல் செய்துவிட்டது. ஒரு கடமைக்காக செய்யவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளபட்டு, அதை நிறைவேற்றினோம். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவிலில் இதை எளிமையாக செய்தோம். ஆனால் அந்த கோவிலில் எங்களுக்கு ஏகப்பட்ட மரியாதையுடன் முக்கிய பிரமுகருக்கான இடம் ஒதுக்கப்பட்டு செய்து கொடுத்தார்கள். அது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது! எங்கள் குடும்பத்தார்களை தவிர எவருக்கும் அழைப்பு விடுக்காமல் செய்தாலும், அப்பா பங்குபெற்றுள்ள அமைப்புகள், மற்றும் சங்கத்தின் முக்கிய தலைவர்கள் அங்கே வந்துவிட்டார்கள். அதுவும் எனது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சிதான். அவருடைய பிள்ளைகளும்,அவருடைய துணைகளும், மற்றும் அனைத்து பேரப்பிள்ளைகளும் சூழ அவர்களுடைய திருமணம் நடந்தது. சொல்லபோனால் ஆண்டவன் எங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பாக்கியம் அது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பின் எங்கள் இல்லம் வந்தோம். பிறகு ஏகப்பட்ட முக்கிய பிரமுகர்களும், என் அம்மாவின் பள்ளியை சேர்ந்தவர்களும் அப்பாவின் பள்ளி மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் வீட்டிற்கு வந்து என் பெற்றோர்களின் பாதம் வணங்கி ஆசிர்வாதம் பெற்று சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களுடைய பெருமை அன்றுதான் காண முடிந்தது. இதுபோன்றா பெற்றோர்களுக்கு பிள்ளையாக பிறந்த பெருமை அன்றும் கிடைத்தது எங்களுக்கு. அவர்களுடைய ஆசி இதை படிக்கும் என் நண்பர்களும் கிடைக்கும் என்பது என்னுடைய உத்திரவாதம். இந்த முக்கிய நிகழ்ச்சியில் பங்குபெற தமிழகம் சென்றதால்தான், சிங்கப்பூரில் நடந்த அனைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் பங்குபெற இயலாமல் போனது. இப்பொழுது சொல்லுங்கள் எனக்கு என் பெற்றோர்கள்தானே முக்கியம். அதைதான் நான் செய்தேன். புகழ் வரும் போகும்! நல்லவர்களின் ஆசிர்வாதம் என்றுமே நமக்கு நல்லது தரும். எனவே பெற்றோர்களை மதிக்கப் பழகிக்கொள்ளுங்கள். எல்லாம் நன்மையாகவே நடக்கும்! என் மனைவி இதை படிக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவும்..அஹ்...ஹ......ஹா...ஹா....
Subscribe to:
Posts (Atom)